எனது மேடைக் கவிதைகள் -1

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாட்டினையொட்டி (புதுக்கோட்டை-மே 28-29 - 2010 )நடைபெற்ற  பொதுமேடை கலைவிழாக் கவியரங்கில் நான் வாசித்த கவிதை


0
0  கூடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம்.
   பிரித்துவைக்கிற கோழைகளுக்கு எதிர்;வணக்கம்.
  சட்டையைப் போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு வணக்கம்
    சாதியைப் போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு எதிர்வணக்கம்

   சிவப்பணுக்களும் வெள்ளையணுக்களும்
   ஓடுகிற இரத்தங்களுக்கு வணக்கம்
    வர்ண அணுக்கள் ஓடுகிற இரத்தங்களுக்கு எதிர்வணக்கம்
     தமனிகளையும் சிரைகளையும்
    கொண்டிருப்பவர்களுக்கு வணக்கம்
     தமனிகளையெல்லாம் சிரைகளாக 
    வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர் வணக்கம்

0  நான்கு வர்ணக் கொடி தேசியக்கொடியாய்
  பறக்கும் நம் நாட்டில்
  கொடி கட்டிப் பறக்குது நான்கு வர்ணம்.

0 மூளையில் அழுக்கேற்;றும் முயற்சிக்கு
  மூளைச்சலவை என பெயரிட்டது போல்
  அநியாயத்திற்குப்போய் பெயர் வைத்திருக்கிறார்கள்
  தர்மம் என்று - மனுதர்மம்

0 இன்னும் இருக்கிறது இரட்டைக்குவளை
  இன்னும் இருக்கிறது இரட்டை நீர்நிலை
  இன்னும் இருக்கிறது இரட்டை சுடுகாடு
  எப்போதும் இருக்கிறது கிராமம் இரட்டையாய்

  இரட்டை வாக்குரிமையை மட்டும்
  ஊயிரைப்பணயம் வைத்து ஒழித்துக்கட்டினார்கள்.

  இருக்கிற இரட்டைகளை ஒழிக்க
  எந்த மகாத்மாவும் இந்த மண்ணில் இல்லை.

௦0 நுழைவு மறுக்கும் ஆலயங்கள்
  மானுடத்தின் பிரமிடுகள்.
  தாகம் மறுக்கும் குளங்கள்
  தன்மானத்தின் நச்சுப்பொய்கைகள்
  புகைகின்ற சுடுகாடுகள்
  சாதிப்பேய்களின் ஜனன பூமி

 0அன்பைத் தொலைத்துவிட்டு அவர்கள்
  எந்த சொhக்;கத்தை கண்டுபிடிக்கப்போகிறார்கள்
  பூக்களை எரித்துவிட்டு அவர்கள்
  எந்தச் சாம்பலில் ஒப்பனை செய்துகொள்ளப்போகிறார்கள்.
  மரணத்தைப் பயிரிட்டு அவர்கள்
  எந்த உயிர்களை அறுவடை செய்யப்போகிறார்கள்.


0  உலக அதிசயங்கள் தெரியும் உங்களுக்கு
  உலகத்தின் வெட்கக் கேடுகள் தெரியுமா

  உத்தப்புரத்தின் ஈனப்பெருஞ்சுவர்
  கயர்லாஞ்சியின் பைசா வீடுகள்;
  வெண்மணியின் அனல்; பொங்கும் தோட்டம்.
  கதவடைத்த ஆலய கோபுரங்கள்.
  பாம்புகளை விட்டுவிட்டு
  மனிதர்களைக் குதறும் கீரிப்பட்டிகள்.

0  கோயிலுக்குள் நுழைந்தால் கோயிலைத் தள்ளிவைப்பார்
   குளத்துக்குள் இறங்கினால் குளத்தையும் தள்ளிவைப்பார்
   அவர்கள் விளைவித்த சோற்றைத்தின்றாரே
   சொரணை இருந்தால் சொந்த உயிர் துறப்பாரா…

0  தீண்டாமை ஒழிப்பென்பது
  ஒருநாள் கூத்துக்கு வைக்கும் ஒட்டு மீசை அல்ல
  அது சில மீசைகளுக்கு பின்னால் இருக்கிற
  சில மழிப்புகளின் கூர்மையோடு போரிடும் வாள்.

0  மனித இனத்தின் மகாக்கொடுமையே
  தன்மானத்தில் குறை வந்து தாழ்ந்து கிடப்பதுதான்
  அது அம்மணமாய் தெருவில் அலைவது போல

  எங்கள் அம்மணத்தை அவர்கள்
  உள்ளாடைகளாய் உடுத்திக்கொண்டிருக்கிறார்கள்

  வழியில்லை அவர்களே தந்துவிடுவார்கள்
  அன்றேல்
  அவைகளை நோக்கி எம் கைகள் நீளும்போதே
  ஆதிக்கக் கிளைகளின் அடிவேர்கள் பெயரும்.


0 அதோ – சுடுகாட்டிலிருந்து
 இருட்டின் அந்தகாரத்தில்
 நீண்ட நீண்ட செங்காயங்கள்
 பூத்து விரிந்ததுபோல் தீப்பந்தங்கள்
 ஒன்றாய்ப் பலவாய் நடம்புரிந்துவர
 அது கண்டு - தூரத்தில்
 நடம்புரிந்த தில்லை அம்பலத்திலிருந்து
 நடந்து வந்த ஒற்றைத் திரிப்பந்தம்
 ஒரு பொந்துக்குள் ஒளிந்து மடிகிறது.


0  சமம் கோருகிறோம் என்றாலும்
 பலி பீடங்களின் முன்நின்று
 நாங்கள் மன்றாடப்போவதில்லை.
 எங்களுக்குத் தெரியும்
 அசைவ மேய்ப்பர்களுக்கு
 ஆடுகளின் கூக்குரல்கள் கேடடுவிடப்போவதில்லை.


0 வேட்டைக்காரர்களே
 நீங்கள் அடைக்கல நாடகம் போடுவது
 நாங்கள் ஆடுகளாய் இருக்கும் வரைதான்
 கேளுங்கள்
 சிங்கங்ளுக்கான வரலாற்று நாட்கள்
 வந்துகொண்டிருக்கின்றன


0 அமனிதர்களே வாருங்கள்
 எங்கள் வாழ்வியல் உரிமைகளின்
 வழிகளை அடைக்காமல்
 நீங்கள் மனிதர்கள்தான் என நிரூபிக்க
 இது இறுதி வாய்ப்பு


0 நாட்கள் வந்து கொண்டிருக்கின்றன
 எங்கள் நிலம் பரந்து தழைக்க
 எங்கள் வனம் உயர்ந்து கிளைக்க
 எங்கள் கடல் ஆழியாய் எழும்ப
 எங்கள் காற்று ஊழியாய் கிளம்ப


 மலையாய் மலையாய் நிமிர்ந்து நிற்போம்
 அப்போது தீண்டமுடியாமை அல்ல
 உங்களால் எங்களை தாண்டவும் முடியாது.


----------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

ஒரு எளிய எழுத்தாளன் / விமர்சகனின் பரிந்துரைகள்

முத்தொள்ளாயிரம் -ஒரு அழகியல் அதீதம்

எனது மேடைக்கவிதைகள்-1