சாமியாடி - ராசி. பன்னீர்செல்வன்

பன்னீர்செல்வன் அதிபா பக்கங்கள்

Sunday, 15 April 2012

சாமியாடி


       தினமலர் வாரமலர் சிறுகதைப்போட்டியில்
                      முதலிடம் பெற்ற கதை
                         ( அக்டோபர் 1994 )


சாமியாடி கூட்டு வண்டியில் வந்து இறங்கினார்.  வேளார் மனையில் இருந்த எல்லா வேளார்களும் ஒருமிக்க கூடி துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு குனிந்து கும்பிட்டனர்.

சாமியாடி பெரமய்யா என்றாலே எல்லாவற்றையும் மீறிய ஒரு மரியாதை சுத்து பத்து அத்தனை கிராம மக்களுக்கும் உண்டு.

பூவனப்பட்டியின் குதிரையெடுப்புச் சாமியாடி அவர்.  நெடுநெடுவென வளர்த்தி.  இருந்த சதைப்பூச்சு அங்கங்கேசுருங்கிப் போய் கனிந்து சுருங்கிய பேரிச்சம் பழத் தோலை ஞாபகப்படுத்தும்.

அள்ளி முடிந்த முரட்டுக் கூந்தல், நீண்ட முகத்தில் துருத்திய தாடை, வளர்த்தியைச் சரிக்கட்ட கொஞ்சமாய் முன்வளை வடித்த முதுகு.  நிறைய வரி மடிப்புகளோடு பெரிய வயிறு.  இந்த அறுபது வயது முதுமையிலும் அசந்துபோய் மூலையில் குந்தாத ஜீவனுள்ள சரீரம்.

மூன்றடி நீளம், அரை அடி அகலத்தில் பெரிய அரிவாளைத் தூக்கிக் கொண்டு, நாக்கைத் துருத்தி, ஆகாயத்தைப் பார்த்து உருட்டிய விழிகளை மேல் இமைக்குள் செருகியவாறே, சன்னமாய் ஆரம்பித்த விசில் சத்தம் ரொம்ப உயர்ந்து கொடூரமாய்ப் பீறிட, அவர் மீது சாமி வந்து எகிறியதென்றால் அத்தனை ஜனமும் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து கும்பிடும்.

பூவனப்பட்டியில் அய்யனாருக்கு குதிரையெடுப்பு செய்ய தேதி வைத்தாயிற்று.

அதற்கு குதிரைகள் செய்வதற்காக தட்டுத் தாம்பூலத்துடன் அச்சாரப்பாக்கும், கட்டளைக் காசுமாய் எல்லா வேளார்களுக்கும், சாமியாடியும் கூட வந்த கங்காணித் தேவரும் வைத்தனர்.

மறுநாளே வேளார்மனை முழுக்க சட்டிபானை வேலையை ஒதுக்கி வைத்து விட்டு, குதிரைகள் செய்ய ஆரம்பித்தது.

பூவனப்பட்டியில் குவைத்தும், சிங்கப்பூருமாய் தண்ணியாய்ப் பணப்புழக்கம், என்றாலும், குதிரை செய்யும் வேளாருக்கு விலை கொடுக்கும் பழக்கமில்லை.  தட்சணைக் காசு மட்டும் தான்.  இது வழிவழியாய் வந்த சாமிகட்டளை.

வேளார்களுக்கும், விலை கேட்க வாய் வராது.  யாரும் கொடுத்தாலும், வாங்கக் கூடாது. சாமிகுத்தம் சேரும்.  எடுப்பு முடிந்ததும் கரைகாரர்கள் தரும் நெல்லில் கொஞ்சமாய் பஞ்சம் தீரும்.

எடுப்பு என்று மிராசுகளின் உபயத்தில் தண்ணியில் முங்கி முங்கி நீச்சலடிப்பார்கள் வேளார்கள்.

பூவனப்பட்டிக்கு விடுமுறையில் வந்திருந்தான் குமார். கூட இரண்டு நண்பர்களும் வந்திருந்தனர்.  திருச்சியில் படிக்கின்றனர்.

‘டீ’ சாப்பிடலாம் குமார்....

நண்பன் கூப்பிட ‘சுருக்’ கென தைத்தது குமாருக்கு கடைப்பக்கம் வந்தது தப்பென உணர்ந்தான்.  குமாருக்கு அவ்வூர் கடைகளில் கிளாசில் டீ கிடையாது.

நண்பர்களுக்கு முன்பாகவா அவமானப்படுவது.

சாப்பிடத்தானே போறம்.... இப்பப் போய் எதுக்கு டீ.....

சமாளித்தவாறே நடந்தான். மத்தியான பூசை நடக்கும் மணி கணீரென்று ஒலிக்க.......... பூவனத்து மாரியம்மன் கோயில் தாண்டிப் போகையில்...............

குமார் ரோட்டிலேயே நின்று செருப்புகளை கழட்டி விட்டு சாமி கும்பிட, நண்பர்களும் அவ்வாறே செய்துவிட்டு செருப்புகளை மாட்டும் போது.

கோயிலுக்குள்ளிலிருந்து வெளியே வந்த தலையாரி, குமாரை கண்கள்  சுருக்கிப் பார்த்து புருவம் உயர்த்தினான்.

“..........ப் பயலுகளெல்லாம் தள்ளி நின்னு  கும்பிடுங்கடா, விட்டா உள்ளேயே புகுந்துருவிக போலருக்கே...............”

மற்ற இருவரையும் சொற்களின் வெப்பம் தாக்கத் தொடங்கியபோது குமாரின் முகத்திற்கு உடம்பின் ரத்தமெல்லாம் ஒன்றாய் வந்து சேர்ந்திருந்தது.

“ஏய்யா................? உள்ளே போயி கும்பிட்டா என்ன பண்ணுவே.  நீ............ டே, வாங்கடா உள்ளே, யோவ், உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்க.

இழுக்காத குறையாய் அவர்களின் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போயிலுக்குள் நுழைந்தான் குமார்.

வைத்தகண், வாங்காமல் குமாரைப் பார்த்துக் கொண்டே, மூவருக்கும் விபூதி கொடுத்தார் குருக்கள்.

டுத்தநாள் சாயங்காலம் சேர்வைக்காரரின் வீட்டில் வார்த்தைகள் எகிறிக் குதித்துக் கொண்டிருந்தன.

“இப்ப ஒருத்தன் நுழைஞ்சிட்டான்...... விட்டோம்னு வைங்க........ நாளக்கி...... ப்பய மக்க அத்தனை பேரும் புகுந்துருவாங்கெ...  ஒரு மட்டு மரியாத இல்லாமப் போயிடும் சொல்லிப்புட்டேன்......

“விட்டாத்தானே.............. அதுலயும்பாரு, எவ்வளவு குசும்பு இருந்தா,  தலையாரிய கீழ தள்ளிட்டு புகுந்திருப்பாங்கெ.............. எல்லாம் உங்க மொகத்துக்காகத்தான் ஐயா பாக்குறது.

அப்பச்சிக் கிழவர் புகையிலையை அசக்கித் துப்பியவாறே பேச ஆரம்பித்தார். “செத்த சும்மா இரும் கங்காணி, சேர்வே,   நீமுரு என்ன செய்யிறீர்னா ஒரு தண்டோரா போட்டு அந்த பயலுகிட்ட ஒரு அபராதத்தை வாங்கிப்புடும், சரியாய் போய்டும்.

“கிழிஞ்சாப்புலத்தான்............... யோவ், பெரிசு, நீ எந்திரிய்யா மொதல்ல, பெரிசா சொல்ல வந்துட்டாரு............. தூக்கிப் போட்டு ரெண்டு மிதிமிதிச்சா மத்தப் பயலுகளெல்லாம் ஒழுங்கா இருப்பாங்க................ அத விட்டுட்டுடு................

சேர்வைகாரர் அவர்களைக்  கையமர்த்தினார்.

கொஞ்சம் சும்மா இருவேலு, நாலயும் நாம யோசிக்கணும், வஞ்சகமில்லாம நம்ம வயக்காட்டுல ஒழைக்கிறாங்க அவங்க, சின்னப் பயலுக பிரச்சினையிலே ஊர்ச் சண்டை வந்துரக் கூடாது.......... அது நல்லதில்லை.............

அதுக்காக? அது சரிப்பட்டு வராதுங்கய்யா..... ஆளுக்கு ஆள் ஒரே எகிறல்தான்.

குதிரையெடுப்புக்கு இன்னும் இருபது நாட்கள் குழையக் குழைய அரைத்தெடுக்க மணற் சாந்தில், வைக்கோல் கூளமும், ஈச்சநாரும், புளிச்ச கூளமுமாய், சேர்த்துப் பிசைந்து வேளாளர் மனையில் குதிரைகளின் உடம்புகள் தயாராகிக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலும் குதிரைகள் நாலுகால் ஊன்றி பாதி உடம்பு வரை வந்திருந்தன.

பூவனப்பட்டியில் எல்லா மிராசுகளின் தென்னந்தோப்புகளிலும் நாடாவிகள் ‘சாமி’களுக்கு கலயங்கள் கட்டினர்.  குதிரையெடுப்பு அன்று குடிக்காதவனுக்கு பூவனப்பட்டியில் ‘ஆம்பிளை மரியாதை’ கிடைக்காது. பெண்களிடம் கூட.

நேர்த்திக்கடன் உள்ளவர்கள் வெட்டுக்கிடாயகளுக்கு கோனார் வீடுகளில்  அச்சாரம் கொடுத்தனர்.  மரம் இருப்பவர்கள் ‘பலாக்கொட்டை’களுக்கு வெட்டுப்பதம் பார்த்து வைத்தனர்.  இல்லாதவர்கள் அடுத்தவர்களிடம் சொல்லி வைத்தனர்.  எல்லார் வீட்டிலும் எடுப்பன்று பலாவாசம் வீசும்.

கோப்பு அட்டையில் பழுப்புக் காகிதங்களை வைத்து அதன்மீது அர்ஜென்ட் என்று போட்டிருந்த சாயம் போன சிவப்புப் பட்டியை மடித்துக் கட்டினார் ஹெட் கான்ஸ்டபிள்.

பூவனப்பட்டியிலே என்ன எல்.கே சார் ? எதுவும் சாராயக் கேசா......?

இல்லப்பா............... சாதிப்பிரச்சனை ரெண்டு பேர் கோயிலுக்குள்ள போகப் போயி பிரச்சனை ஆகிப் போச்சு......... அவங்களை ஊர்க்காரனுக நாலைஞ்சு பேர் சேர்ந்து ராத்திரியிலே போய் வீடு புகுந்து அடிச்சிருக்காங்கெ.........

காயம் ரொம்பப் பலமா?

“உயிருக்கு ஆபத்தில்லே............... சைக்கிள் செயினால அடிச்சிருக்காங்கெ......... உடம்பெல்லாம் வாருவாரா கிழிஞ்ச மாதிரி ஆகி.. இங்கதான் ஜி.ஹெச்.சுல சேரந்திருக்கு.

“கேஸ் எத்தன பேர் மேலே? எங்கே பைலைக் கொடுங்க...".

வாங்கிப்படித்த கான்ஸ்டபிள் கண்களைச் சிமிட்டி புன்னகைத்தவாறே ஹெ.கான்ஸ்டபிளைப் பார்த்தார்.

“ஸார்.... செம பார்ட்டிங்க ஸார் இவங்க மூணுபேருமே பெரிய கைங்க... சிங்கப்பபூர் காசு. ஒரே அமுக்கா அமுக்கிருங்க. சாயங்காலம் பார்ட்டி வச்சுக்குவோம்..".

பூவனப்பட்டியில் ஹெ.கான்ஸ்டபிள் வந்து இறங்கியதும் டீக்கடை வாசிகள் அவரைச் சூழ்ந்தனர்.   பெட்டிஷனில் இருந்த மூவரில் ஒருவன் அங்கேயே இருந்தான்.  அவரைப் பார்த்ததும் அருகில் வந்தான்.

“வாங்க ஸார்....... டே....... அந்த சேரைத் தூக்கி இப்படிப் போடு........... “டீக்கடை கல்லாவில் இருந்த சேர் தூக்கப்பட" உட்காருங்க சார்” கூல்டிரிங்க் சாப்பிடுங்க........ டேய் கூல்ட்ரிங்ஸ் கொடுடா.

பெட்டிஷன்ல யார்யார் பேரு சார் கொடுத்திருக்கானுக.... சுற்றி இருந்தவர்கள் குரோதத்துடன் கேட்டனர்.

“டே பொறுடா.... சார் சொல்வாருல்ல...”

மூன்று பேர் பெயர்களை சொன்னதும், அதில் ஒருவனான  அங்கு நின்றிருந்தவன் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்தவாறே,

“சரி, சரி போங்கப்பா... ஏன் கூட்டம் போடுறீக... ஸார் நீங்க வாங்க போகலாம்...”

“ஹெட் கான்ஸ்டபிளை தன் பைக்கில் ஏற்றிக்கொண்டான்.  தோட்டத்து ஷெட்டில் நிறுத்திவிட்டு உள்ளே போய் இரண்டு வெளிநாட்டு பாட்டில்களை எடுத்து வந்தான்.  கான்ஸ்டபிளுக்கு வாயெல்லாம் சிகரெட் நிகோடின் படிந்த பற்கள்.

அவரை உட்கார வைத்து வேலையாள் ஒருவரை மரத்தில் ஏறி இளநீர் வெட்டச் சொல்லிவிட்டு இன்னொருவனை கூப்பிட்டான்.

“வீட்டுக்கு போயி அக்காகிட்ட ரெண்டாயிரம் ரூவா வாங்கிட்டு வா...”

ஹெட் கான்ஸ்டபிள் மெல்ல குறுக்கிட்டார்.

“இல்ல தலைவா, மூணு பேரு லிஸ்ட்ல இருக்கு, கேஸ் பெரிசு, இப்ப ‘ஆக்டெ’ல்லாம் ரொம்பக் கடுமை, அரெஸ்ட் பண்ணினா ஜாமீன் கூட கெடயாது".

"அதான்... ரெண்டாயிரம் தர்றேன் சார்.."

“எஸ்.ஐ. குறைஞ்சது அஞ்சு எதிர்பார்ப்பாரு, அதுவும் நீங்களெல்லாம் இருக்கிறதாலதான் ஐயா விடுறாரு”.

கொஞ்ச நேரத்தில் பையன் கொண்டு வந்து கொடுத்த நாலாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு பஸ் ஏறினார்  ஹெட்கான்ஸ்டபிள்.

மூன்று பேரில் இருவர் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரில் இல்லையென்றும், மற்ற ஒருவனின் பெயரில் அந்த ஊரில் யாருமே இல்லையென்றும் சிகரெட் புகையும் விரல்களோடு பைலில் குறிப்பு எழுதினார் சப் இன்ஸ்பெக்டர்.

ஸ்பத்திரியில் ரத்த விளாறாய் ரணப்பட்டுக் கிடக்கும் தன் தம்பிகளை பார்க்கப் பார்க்க கணேசனுக்கு முகமெல்லாம் சிவந்தது.  கண்கள் எரிந்தன.

ரொம்ப விசனத்துடன் புதுக்கோட்டை சென்று இயக்கத் தலைவருடன் பேசிவிட்டு சமாதானமடையாத மனத்தோடு பூவனப்பட்டிக்குத் திரும்பினான்.

படலைத் தள்ளிக்  கொண்டு வாசலில் நுழையும் போதே தன் அப்பாவான சாமியாடி பெரமய்யா செய்து கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்தது.

குதிரையெடுப்புக்காக வீட்டில் இருந்த பெரிய பெரிய வேல்களையும், துவைஞ்சு சானைபோட்டு வந்திருக்கிற அரிவாள்களையும் புளியும் நாரும் போட்டு தேய்த்துக் கொண்டிருந்தார் சாமியாடி.

அது கண்ணில பட்டதும் தான் கணேசனுக்கு கட்டுக்கடங்கா கோபம் ‘குபுக்’ கென பொங்கியது.

“இப்ப எதுக்குப்பா நீ இதுகளைப் போட்டு தேய்க்கிறே?”

“எடுப்பு வந்துருச்சுல்ல..........” புகையிலையை அடக்கியவாறு அவனைப் பார்க்காமலேயே பேசினார்.

“ஏய்யா......கோயிலுக்குள்ளே போனாங்கண்ணு பெத்தபுள்ள ரெண்டு பேரையும் நார், நாரா கிழிச்சுப் போட்டிருக்கானு............. நீ என்னன்னா கொஞ்சம் கூட சொரணையில்லாம சாமியாடப் போறேங்கிற....".

“யே......... போலே.... நாப்பது வருஷமா...... ஏன், உம்ம பாட்டன் காலத்துலேர்ந்து சாமியாட்டம்....... இன்னிக்கு நேத்தா, இதுக்குக்குன்னு போயிவிடுறதாலே..... நம்பள சாமியாட கூப்புடசாதியாலே பாக்குறாக அவுக... போலே”

“யோவ்..... கேட்டுக்க, இந்த வருஷம் நீ சாமியாடவும் வேண்டாம், புடுங்கவும் வேண்டாம், பேசாம வீட்டில் கெட...............”

“சர்தான் போலே.........”

“பார்த்துக்க, சாமியாடப் போனே. கெழவா ஒன்ன தலைல கல்லைப் தூக்கிப் போட்டு கொன்னுபுடுவேன்........ ஆமா, சொல்லிப்புட்டேன்.........”

அக்கம் பக்கத்துக்கு ஆட்கள் கூடிவிட அம்மா அரக்கப் பரக்க வந்து கணேசனைப் பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு போனாள்.

வேளார் மனையிலிருந்து குதிரைகள் கிளம்பிவிட்டன.  அப்படியே நிஜக்குதிரை அளவுக்கு அய்யனார் குதிரை, கறுப்பர், நொண்டிச்சாமி மற்றும் துணைச்சாமிகள், குறுமணிகள், எல்லை முனிகள் என்று எல்லாருக்கும் குதிரைகள்.

எல்லாக் குதிரைகள் தலையிலும் புதுவேஷ்டி போட்டு உருமா கட்டி உடம்பு தெரியாமல் முழுக்க செவ்வந்தி மாலைகளை சுற்றியிருந்தனர்.  கழுத்துக் கொள்ளாமல் பெரிய பெரிய சரிகை மாலைகள்.

கொட்டு, தப்பு, தாரை, தம்பட்டம், கொம்புகள், முழங்க முழங்க பெரிய குண்டத்தில் நெருப்பு வளர்த்து அதில் கொட்டிய சாம்பிராணிப் புகை மண்டலத்தின் நடுவே குதிரைகள் நகர்ந்தன.  தேவலோகத்தில் இருந்து புரவிகள் வருவது போல்.

சம்பிரதாயப் பூர்வமாக, முன்னால் சிவப்புக் கம்பள குடை கட்டிய தட்டு வண்டியில் பழைய முல்லைவன ஜமீனின் பேரன் போக, பின்னால் குதிரைகள்.

இரண்டு, மூன்று குதிரைகளாய் சேர்ந்து, சேர்ந்து அந்த அந்த வகையறா  இளைஞர்களின் தோள்களில்.

இளைஞர்கள் தோள்களில் மட்டும் குதிரையேற்றவில்லை.  உடம்புக்குள்ளும் ஏற்றியிருந்தார்கள்.  ‘எடுப்புகள்’ குடித்த பலத்தில் ஒன்றனை ஒன்று இடித்துக் கொண்டும் துரத்திக் கொண்டும் புரவிகள் காற்றில் ஓடிவந்தன.

முல்லைவன ஜமீனின் வாரிசு வேளார் மனையிலிருந்து ஆந்தணி எல்லைவரை தான் வருவார்.  அது இரு ஊர்களுக்கும் நடுப்பட்ட எல்லைக் கிராமம்.

இந்தப்பக்கம் பூவனப்பட்டி ஒன்றரை மைல், எல்லையில் போய் கிடாய் பலி கொடுத்து, சேர்வையையும், சாமியாடியையும் முன் வைத்து, பூ வனப்பட்டிக்காரர்கள் குதிரைகளில் வரும் தெய்வங்களை வரவேற்று அழைத்து வருவது வழிவழியாய்ப் பழக்கம்.

வேளார் மனையிலிருந்து பூவனப்பட்டிக்கு பைக்கில் வந்த வேலு, சேர்வைக்காரரிடம் சொன்னான்.

“மனையிலிருந்து குதிரை புறப்பட்டாச்சுங்கய்யா..........” கேட்டதும் பரபரத்துப் போனார் சேர்வை, எக்காரணம் கொண்டும் எல்லையில் குதிரைகளை காக்க வைத்தால் ஆகாது.  தெய்வ நிந்தனை ஆகிவிடும்.

“என்ன கங்காணி? சாமியாடிக்கு என்ன ஆச்சு? இன்னங் காணோம்...........

பதிலை எதிர்பார்க்காமலே எதிரே நின்றவனை கூப்பிட்டார்.

"சம்முவம், போய் பார்த்துட்டு வா.... நாழியாச்சே... கரெக்கிட்டா வந்துருமே சாமியாடி....”

அப்பச்சிக் கிழவர் மெல்ல விஷயத்தை உடைத்தார்.

“ஒண்ணுமில்லே..... சாமியாடி மவன் கொஞ்சம் பிரச்சனை பண்ணுறாங்கணும். அவன் தம்பிகளை நம்ம பயலுக அடிச்சுப்புட்டதலா அப்பனை சாமியாட விடமாட்டேங்குறான்.  அவன் சாதிக்காரெனல்லாம் ஒண்ணாச் சேர்ந்துகிட்டு இந்த வேலை பண்ணுறானுக...............

யோசனையாய் எல்லாரையும் பார்த்த சேர்வைகாரர் துண்டை எடுத்து போட்டுக் கொண்டு கூட்டு வண்டியில் ஏறி" சமியாடி வீட்டுக்குப் போ" என்றார்.

ஊர்க்கோடியில் இருந்து சாமியாடியின் குடியிருப்பில் அவர் வந்து இறங்கிய போது.

“அய்யய்யோ.... வாங்க தேச்சரே.... வாங்க....”

அந்த மக்கள் பதைபதைத்துப் போய் குனிந்து வணங்கி வரவேற்றனர்.

சாமியாடி வீட்டு வாசலில் கட்டிலில் உட்கார்ந்து சேர்வைகாரர்  பேசும் முன்னேயே கணேசன் ஆரம்பித்தான்.

“எங்க அப்பன் இந்த வருஷம் சாமியாட வராதுங்கய்யா, நீங்க வேற சாமியாடிய ஆட வைச்சுக்கங்க.......”

“என்னடா பேசுறே நீ?  எவனோ ரெண்டு பேரு அடிச்சுக்கிட்டத சாமி காரியத்துல கொண்டாந்து சம்பந்தப்படுத்துறே.............. இவ்வளவு காலமாக நம்ம ஊர்லே இப்படியொரு சாதிச் சண்டை வந்திருக்கா? இல்லே......சாமிக்காரியந்தான் நின்னிருக்கா?”.

பக்கத்தில் கைகட்டி நின்றிருந்த சாமியாடியைப் பார்த்து

“என்ன சாமியாடி, இவனுக சொல்றாங்கன்னு நீயும்... இருந்திட்டியா? கணேசா, சாமியாடி ஊருக்கே பொதுவான மனுஷன்.... சாமிக்கு சாதியில்லை, அத இதச் சொல்லாம எல்லாம் எடுப்புக்கு கிளம்புங்க........ம்.........”

“சாமிக்கு சாதியில்லன்னு நல்லாத்தான் சொல்றீங்க............... ஆனா, கறுப்பர் கோயில் சாமிலேர்ந்து, நொண்டிக் கோவில் சாமி வரைக்கும் எல்லாச் சாமியும் கோயிலுக்குள்ளே மண்டபத்துலே நின்னுதான் சாமியாடுது.  ஆனால், இந்த சாமி மட்டுந்தான் வெளியே நின்னு குதிரை வைக்கிற பொட்டல்ல ஆடுது.

“அடபயபுள்ள...... இதான் உங்க குறையாக்கும்.  ஆதிலேர்ந்து பொட்டல்ல ஆடுது, அவ்ளதான், . நாமளா பாத்து வச்சோம்?  சாமியிலே என்னடா வித்தியாசம்?  இப்ப என்ன, இந்த வருஷம் சாமி மண்டபத்துலே ஆடுது.  பெரிய இதா அது........ கௌம்புங்கடா சீக்கிரம்....... நாழியாச்சு....."

ஏற்கனவே தயாராய் நின்ற சாமியாடி உடனே சேர்வைக்காரருடன் கிளம்ப, மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் எல்லோரும் அவரின் பின்னே சென்றார்கள்.

இவர்கள் போய்ச் சேரவும், குதிரைகள் ஆந்தணி எல்லைக்கு வரவும் சரியாகஇருந்தது.  வாணம் போட்டு, கிடாய் வெட்டி, கள் வைத்து பூசை போட்டதும், குடை மரியாதை சேர்வைக்கு மாற மீண்டும் குதிரைகள் துள்ளிக் கிளம்பின.

தங்கள் எல்லைக்குள் பாதம் வைத்ததும் குதிரைத் தூக்கிகளுக்கு ஒரு புதுத் தெம்பு .ஏறத்தாழ குதிரைகள் ஓட ஆரம்பித்து விட்டன.

கீழே மனிதர்கள் தோள் கொடுப்பதை மறந்து விட்டு மேலாகப் பார்த்தால், அந்தரத்தில் குதிரைகள் பறந்து வருவது போல் இருந்தன.

குதிரைகள் மனிதர்கள் மீது சவாரி செய்து ரொம்பச் சொகுசாய்    பூவனப்பட்டியில் வந்து இறங்கின.

பிடாரியம்மன் கோயில் முன்பாக உள்ள பாடலிப் பொட்டலில், அரை வட்ட வடிவில் குதிரைகள் நிறுத்தப்பட்டு ஒவ்வொன்றின் எதிரிலும் பூ , எலுமிச்சம்பழம், கோழித்தலை, செருகிய வேல்கள் குத்தப்பட்டிருந்தன.  இங்கு வைத்து பலியும், பூஜையும் நடத்திய பின் நடுநிசியில் ஆள் பார்க்காமல், விளக்கு பிடிக்காமல் ஏரிதாண்டி காட்டில் உள்ள அய்யனார் கோயிலில் தூக்கிப் போய் வைப்பார்கள்.

கழுத்துக் கொள்ளாமல் பித்தளை உருட்டுகள் கோர்த்த சங்கிலிகளும், கை நிறைய ஈயவளையங்களும், பாதி கண்டைக்கால் அளவுக்கு கால் முழுக்க தண்டைகளும், உடம்பெல்லாம் பூமாலைகள் விபூதி சந்தனக் குழைவுமாய் மெல்லிய உதறலுடன் நின்றார் சாமியாடி.

‘கரை’காரர்களின் எட்டு கிடாய்களை மட்டும் சாமியாடி வெட்டுவார். மற்றவற்றை கிடாய் வெட்டிகள் வெட்டுவார்கள்.

மின்னும் அரிவாளைத் துடைத்து இருவர் தூக்கி சாமியாடியிடம் கொடுக்க கிடாய்களை வெட்டினார்.

“என்ன ஆச்சு சாமியாடிக்கு இன்னிக்கு, ஜனங்கள் எல்லாருக்கும் முகங்கள் சுணங்கிவிட்டன.  மெல்ல தங்களுக்குள் முணுமுணுத்துக் கொள்ளவும் செய்தனர்.  அவர் வெட்டிய அத்தனை கிடாய்களும் ‘தொங்கு கிடாய்’களாய் போனது தான் காரணம்.

வெட்டும் போது கிடாய் தொங்கினால் ஏதோ சாமிக்குத்தம் நேர்ந்திருகிறதென்று பதைபதைத்துப் போகிற மக்கள் அவர்கள்.

ஆந்தணி எல்லையில் சாமியாடி வெட்டிய போதே தொங்கு கிடாய்தான்.  அப்போதே பாதிப்பேர் முகம் சிறுத்துப் போய் கவலைப்பட ஆரம்பித்து விட்டனர்.

சாமியாடி கிடாய் வெட்டுவது அந்த வட்டாரத்திலேயே ரொம்ப பிரசித்தம்.  அவருக்கு இதுவரை ‘தொங்கு கிடாய்’ விழுந்து யாரும் அறிந்ததில்லை.  போன வருஷங் கூட கிடாய் வெட்டிகளிடம் கொடுக்காமல் தானே நாற்பது ஐம்பது கிடாய்களை, வெட்டிச் சாய்த்தது ஜனங்களின் ஞாபகத்துக்கு வந்தது.

‘இப்ப மட்டும் என்னாச்சு....... சாமியாடிக்கு’

வெட்டு முடிந்ததும் பதை பதைக்கும் மனங்களுடன் எல்லாரும் கோயிலுக்குள் சென்றனர்.  சாமியாடியின் குடியிருப்பு ஆட்கள் வெளியில் நின்று கொள்ள சாமியாடியும், அவருடன் இரண்டு பேரும் கோயிலின் உள்ளே போனார்கள்.

உள்ளே கால் வைக்கும் போதே சாமியாடிக்கு பாதங்கள் வியர்த்தன.  மனதுக்கும் ‘விருக் விருக்’கென்று ஒரு மெல்லிய விதிர் விதிர்ப்பு, பாதங்கள் தரையோடு ஒட்டி ஒட்டிப் பிரித்தன.

கல்யாணக் காரியம் முதல், வெளிநாட்டு விசா வரை சாமி அழைத்து கேட்க நிறைப் பேர் மண்டபத்தில் கூடியிருந்தனர்.

பண்டாரம் சூடம் ஏற்றி சாமியாடிக்கு ஆராதனை காட்டினர்.  சாம்பிராணித் தூபம் மண்டபம், முழுக்க நிறைந்தது.  இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் ‘ஊய்’ என்று விசில் ஊதிக் கொண்டு சாமி வந்து குதித்தாடும்.

அப்புறம் கேள்விகளுக்கு சாமியாடி சொல்கிற ஒவ்வொரு சொல்லும், அப்படியே பலிக்கும்.  பத்துப் பதினைந்து நிமிடம் ஆனது, அரைமணி ஒரு மணி நேரமும் ஆகிப்போனது.

சாமியே வரவில்லை.

‘என்ன ஆச்சு சாமியாடிக்கு? எல்லார் முகங்களிலும் பயமும், கலவரமும், தொற்றிக் கொண்டது.  அவர் முகத்தில் நடந்த களைப்பும், கிடாய் வெட்டிய களைப்பும் தான் தெரிந்திருந்தே தவிர, சாமி வருகிற அறிகுறியே இல்லை.

பத்துத் தடவைக்கும் மேல் சூடம்காட்டி அசந்து போன கோயில் பண்டாரம் சேர்வையிடம்,

“போதுங்கய்யா........ நல்ல நேரம் போயிருச்சு , இனிமே சாமி அழைக்கிறது நல்லாயிருக்காது.......... இன்னொரு நாள் குறிச்சு அப்புறம் அழைக்கலாம், அதான் நல்லது....................

எல்லோரும் ஆமோதிக்க கூட்டம் கலைந்த போது ஊர்க்காரர்களின் பதைபதைப்பு கலவரம் எல்லாம் மறைந்து இன்னொரு தீர்க்கமான முடிவுக்கு அவர்கள் வந்திருந்தனர்.  மெல்ல முணுமுணுக்கவும் செய்தார்கள்.

‘இந்த வருஷம் சாமியாடியை உள்ளே அழைத்ததால் தான் தெய்வ குத்தம் ஆகிவிட்டது. சாமி வராததற்கும், தொங்கு கிடாய்களுக்கும் அதுதான் காரணம்’ என்று முழுதாய் நம்பினர்.

அவர்களின் அப்போதைய மனதுப்படி இனிமேல் இவர்களை உள்ளே விடுவதாய் இல்லை.

வெளியே நின்று சாமி வராததைத் தெரிந்து கொண்ட குடியிருப்பு மக்களும், ஊர்க்காரர்கள் நினைத்ததையே நினைத்தனர்.  ஒவ்வொருவர் முகத்திலும் தாழ்வு மனப்பான்மையும் சுய பச்சாதாபமும் தெரிந்தது.

அப்போதைய மனதுப்படி இவர்களும் இனிமேல் உள்ளே நுழைவதாய் இல்லை.

சாமியாடிக்கு உடம்பும், மனசும் ரொம்பச் சோர்ந்து போய் விட்டது.  அவரை வெளியில் கூட்டி வந்து உட்கார வைத்து முகத்தில் தண்ணீரை அடித்து துடைத்து விட்டனர்.

‘இந்த வருஷம் கோயிலுக்குள்ளே சாமியாட்டம்னு சொன்னதாலே, ‘எடுப்புக் கள்ளை’க் குடிக்காம ‘சும்மா’ வந்தது தப்பாப் போச்சு', மனதுக்குள் நினைத்துக் கொண்டே ஒரு பெருமூச்சு விட்டார் சாமியாடி.

வெளியே வந்த ஊர்க்காரர்கள் வடக்கேயும், குடியிருப்புக்காரர்கள் தெற்கேயுமாக முகம் பார்த்துக் கொள்ளாமல் மெல்ல கலைந்து விலகிச் சென்றார்கள்.

அந்த இரண்டு மக்களின் அடர்த்தியான மவுனம் அடுத்த சில தலைமுறைகளுக்கான சாசனத்தை காற்றில் எழுதிக் கொண்டிருந்தது.

1 comment:

  1. சாதீயச் சமர்க்களங்களில் தீண்டாமையின் தீ நாக்குகள் எப்படி மனிதர்களைப் பொசுக்குகின்றதன என்பதை நறுக்கென உணர்த்தும் அருமையான சிறுகதை. வட்டார வழக்கு மொழியில் படிப்போரைப் பற்றிக் கொள்ளச் செய்யும் பாங்கான நடை... நிறைவில்தான் சற்று நெருடல்.. இளைய புதிய தலைமுறையின் எழுச்சி, பழமைவாதத்திற்குச் சமரசம் ஆகிப்போவது மீண்டும் வேதாளங்களை முருங்கை ஏறச்செய்வதற்கல்லவா வழி வகுக்கும். பொட்டலில் ஆடிய சாமியாடி மண்டபத்துள்ளும் ஆடியிருந்தால் கருவரையைக்கூட கைப்பற்றும் நிலை வந்திருக்கும். சாமிஆடாததற்கு சரக்கு உள்ளே போகாததுதான் எனச் சாமியாடியின் மனக்குரல் ஒலிப்பது.. பகுத்தறிவாளர்க்குச் சரி.. பாமரர்க்கு. குறிப்பாக சாமியாடி வர்க்கத்தைக் கொச்சைப் படுத்துவதாக..அவர்களின் சாதிவழக்கமோ என எண்ணத் தூண்டுமே.

    ReplyDelete